புதுக்கோட்டை மாவட்டத்தில் சசிகலா தலைமையில் ஒன்றிணைய அ.தி.மு.க தொண்டர்கள் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தோல்வியை தழுவி தி.மு.க அமோக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க வை தலைமை ஏற்க சசிகலா வரவேண்டுமென அ.தி.மு.க தொண்டர்கள் பெயரில் புதுக்கோட்டை நகரப் பகுதியில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டியில் சசிகலா, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படங்களுடன் வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த சுவரொட்டியை ஓட்டியது அ.தி.மு.க தொண்டர்கள் தானா அல்லது சசிகலா ஆதரவாளர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்று விடுதலையாகி வந்த பின் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.