இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனாவால் சென்னையில் காலமானார்(76). 1976இல் வெளியான உங்களில் ஒருத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
திருமதிபழனிச்சாமி படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது. கோலங்கள், தமிழச்சி, உடன்பிறப்பு உள்ளிட்ட பல்வேறு படங்கள், கோலங்கள், வாணி ராணி, கஸ்தூரி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.