குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தமிழ்நாடு முழுவதுமாக இன்று தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பரப்புரையின் போது முகஸ்டாலின் அறிவித்திருந்தார். ஜூன் 3 ம் தேதி இந்த தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதனைத்தொடர்ந்து நியாய விலை கடை ஊழியர்கள் இன்று முதல் டோக்கன்கள் வழங்கும் பணியை துவங்கி இருக்கிறார்கள். மதுரை மாவட்டம் திருநகரில் அவர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கினர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியபோது 2 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக கொடுத்தது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நாங்கள் எல்லோரும் தெரிவிக்கிறோம். இரண்டாவதாக எங்களைவிட கீழ்தட்டு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோன்று வருங்காலத்தில் அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். ரேஷன் கடை அதிகாரிகள் கொடுக்கும் பொழுது எங்களுக்கு மனம் திருப்தியாக இருக்கின்றது. வயதானவர்களை அலையவிடாமல் வீட்டில் வந்து டோக்கன் கொடுப்பது எங்களுக்கு சந்தோசமாக இருக்கின்றது. நிதி உதவி எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது. டோக்கன் பெற்றோருக்கு 2 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இம்மாதம் 15ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
கோவையிலும் நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று கொரோனா நிவாரணத் தொகைக்கான டோக்கன்களை வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் டோக்கன் வினியோகம் நடைபெற்று வருகின்றது. பொருட்கள் வாங்க நியாய விலை கடைகளுக்கு வருபவருக்கு அங்கேயே டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள் எதிர்வரும் 15ஆம் தேதி அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் 2 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.