சேலம் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது காரை திருடி சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் முத்துகுமாரராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் சோப்பு கம்பெனி வைத்து நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குரங்குசாவடியிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு சென்று கார் டயரை மாற்றிய பின்பு கடையின் முன்பு காரை நிறுத்தி விட்டு அதற்கான பணத்தை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென ஒருவர் காரை கடத்திச் சென்று விட்டார். இதுக்குறித்து முத்துகுமாரராஜா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் காவல் துறையினர் சேலம் புது ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது ஒருவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் சேலம் புது ரோடு பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் என்பதும் காரை திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து காரை பறிமுதல் செய்துள்ளனர்.