மாடியிலிருந்து தவறி விழுந்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியில் டென்னிஸ் பயிற்சியாளரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக ராஜா தவறி விழுந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ராஜாவுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராஜா மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டர்.
இதனை அடுத்து மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்திருந்தால் ராஜாவை காப்பாற்றி இருக்கலாம் என கூறி அவரின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ராஜாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.