சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் போலி பீடிகளை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 13 பீடி பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவை பிரபலமான கம்பெனியின் போலி பீடிகள் என்று தெரியவந்தது.
மேலும் வாகனத்தில் பீடியை கடத்தி வந்தவர்கள் தென்காசி மாவட்டம் கலுவன் கோட்டையை சேர்ந்த பாபநாசம் என்பவரது மகன் பாஸ்கரன், முத்துச்சாமி என்பவரது மகன் விக்னேஷ், கணபதி என்பவரது மகன் ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர்களுடைய கார் மற்றும் காரில் கொண்டு வரப்பட்ட பீடி பண்டல்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.