சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பார்சலில் தங்க கட்டிகளை சிறு துண்டுகளாக்கி குளிர்பான பவுடரில் கடத்தி வந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த விமான நிலைய சரகத்துக்கு வரும் விமானங்களில் பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் துபாயிலிருந்து வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு 4 குளிர்பான பார்சல் வந்துள்ளது. அந்த பார்சல் மீது சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த பார்சல்களை திறந்து பார்த்துள்ளனர்.
அப்போது பார்சலில் தங்க கட்டிகள் சிறு சிறு துண்டுகளாக மாற்றி அதை குளிர்பான பவுடர்களில் மறைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து பார்சலில் இருந்த முகவரிக்கு சென்று பார்த்த போது அது போலியான முகவரி என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து 1 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள அந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் முதல் முறை நடந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.