மீதமுள்ள ஐபில் போட்டிகளில், இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என, இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்
14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த தொடரில் 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே இந்த மீதமுள்ள 31 போட்டிகளை செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டி நடைபெற்றால் ,அந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று, இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாக இயக்குனர் ஆஷ்லே கைல்ஸ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது மீதமுள்ள ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத இடையிலும் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்தக் காலப்பகுதியில் ஐபிஎல் தொடர் நடந்தால் , இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர்கள் யாரும் இந்த போட்டியில் பங்கு பெற மாட்டார்கள், என்று தெரிவித்துள்ளார்.
ஏனெனில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கிலாந்து அணி பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளது. அதன் பிறகு உலக கோப்பை டி20 போட்டியிலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரிலும், இங்கிலாந்து அணி பங்கேற்க உள்ளதாக கூறினார். எனவே எங்கள் நாட்டு வீரர்களை இந்தப் போட்டியில், விளையாடுவதற்கு ஈடுபடுத்த உள்ளோம், என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணத்தால், எதையும் கணிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த ஐபிஎல் தொடரில் சாம் கரன், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் உட்பட 11 இங்கிலாந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.