ரோட்டோரம் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் லாரி ஒன்று ரோட்டோரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த லாரியின் பின்புறத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்கள் 6 பேர் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திருப்பூரிலிருந்து கார் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது வேகமாக மோதியது. இதில் மெய்யப்பன், முத்துசாமி, முத்தான், சின்னான் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ராம்குமார், செந்தில்குமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் காரை ஓட்டி வந்த திருப்பூரைச் சேர்ந்த சபரி என்பவரும் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.