Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு போக்குவரத்துக்கு வசதி இல்ல…. அரசு ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி…. சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதி….!!

அரசு ஊழியர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வருகிற 24ம் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தவிர்க்கும் வகையில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கடலூர்-புதுச்சேரி, கடலூர்-சிதம்பரம், கடலூர்-சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர்-பண்ருட்டி, கடலூர்-விருத்தாசலம், கடலூர்-காட்டுமன்னார் கோவில், வடலூர்-பண்ருட்டி, திட்டக்குடி-விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோன்று விருதாச்சலம்-உளுந்தூர்பேட்டை, கடலூர்-விழுப்புரம், கடலூர்-சென்னை, வடலூர்-விழுப்புரம், நெய்வேலி-சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காட்டுமன்னார்கோவில்-சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கும் 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன.

இந்த சிறப்பு பஸ்களில் அத்தியாவசிய பணிகளுக்கு சென்று வரும் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே சென்றுவரமுடியும். மேலும் அவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கையில் அமர்ந்து செல்ல வேண்டும். முன்னதாக அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்த பின்னரே பஸ்களில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை கண்டறியப்பட்டு பின்னர் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே பஸ்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |