ஜோலார்பேட்டை அருகில் மின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்றல் நகர் பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரில் மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரிவா என்ற மனைவியும் மிதுன் என்ற நான்கு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீநாத்தின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அதன்பின் தன் மாமியார் வீட்டிற்கு சென்ற ஸ்ரீநாத் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் திடீரென ஸ்ரீநாத் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருப்பவர்கள் ஜோலார்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ஸ்ரீநாத் அழுகிய நிலையில் தூக்கில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் ஸ்ரீநாத் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீநாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.