இரட்டை வாய்க்காலை சுத்தப்படுத்தி தூர்வாரி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் இரட்டை வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்காலில் ஒரு காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் மட்டுமன்றி விவசாயப் பணிகளுக்கும் பயன்படுத்துவது வழக்கமான ஒன்று. அதன் பிறகு நாளடைவில் விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டதால் இந்த இரட்டை வாய்க்கால் கவனிப்பாரற்று போனது. மேலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த வாய்க்காலில் விடப்படுகிறது. அதிலும் குறிப்பாக குப்பைகள் அதிகளவில் இங்கு கொட்டப்படுகின்றன.
மேலும் செடி கொடிகள் வளர்ந்து நிற்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தற்போது கோடை மழை பெய்து வருகிறது. பின்னர் தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளது. ஆகவே இந்த இரட்டை வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்தி பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் பொதுமக்களும் விவசாயிகளும் இந்த வாய்க்காலின் நீரைப் பயன்படுத்திக் கொள்வர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.