கன்னியாகுமரி எல்லைக்குள் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடியில் மூன்றடுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தபின் குமரி மாவட்டத்திற்கு அனுமதிக்கின்றனர். அதன்பின் இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் களியக்காவிளை சோதனைச்சாவடிக்கு திடீரென வந்த போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கேரளாவில் இருந்து வரும் எந்த வாகனங்களையும் இ- பாஸ் முறை இல்லாமல் குமரி மாவட்டத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் அறிவுரை கூறி அவர்களை திருப்பி அனுப்பிவைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.