இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் பகுதியில் அன்பழகன்-சுவலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சுவலட்சுமி மகளிர் சுய உதவி குழுவில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் இவர் கணக்கன்பட்டி அருகில் வந்து கொண்டிருக்கும் போது இவரை இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் பின் தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்த சுவலட்சுமி சிந்துபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.