இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.
அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதிகளைக் கொடுத்து உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில் இந்திய வீரர்களில் யாராவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் அவர் இங்கிலாந்து தொடரை மறந்துவிட வேண்டியதுதான் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. வீரர்கள் மும்பைக்கு வரும் வரை தங்களை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். மும்பையில் நடத்தப்படும் சோதனையில் பாதிப்பு உறுதியானால் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட மாட்டாது. மேலும் இங்கிலாந்தில் புறப்படும் முன் வீரர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.