இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கொரோனாவால் மக்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்தார். அதன் முதற்கட்டமாக ரூ.2000 இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது. இதனால் 10 ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து ரொக்கப்பணம் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் மே-22 ஆம் தேதி வரை நியாயவிலைக்கடைகளில் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே டோக்கன் வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு 16 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.