முன்னாள் கவுன்சிலர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் பரவை பேரூராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் இவர் அங்குள்ள தனியார் பஞ்சமில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தற்போது அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று சமயநல்லூர் நான்குவழிச் சாலையில் அவர் நடைப்பயிற்சி சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் மதுரையில் இருந்து விருதுநகர் நோக்கி வேகமாக வந்த ஒரு வாகனம் அவரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.