இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.
அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதிகளைக் கொடுத்து உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.
மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தற்போது இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை 2 முதல் 18 வயது உள்ள குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய எஸ்இசி என்ற குழு இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்புகள் கோரிக்கை வைத்தது.
இதனை பரிசீலனை செய்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, மருந்துகளை குழந்தைகளிடம் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. குழந்தைகளிடம் இரண்டு மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் செய்ய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பரிசோதனை நல்ல உடல் நிலையில் உள்ள 525 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி 28 நாட்கள் கழித்து இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். இந்தத் தடுப்பூசிகள் தசைகளில் தான் செலுத்தப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.