கொரோனா சிகிச்சை மையமாக நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாற்றும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல்வேறு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து 140 படுக்கை வசதிகளுடன் பி.ஏ கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா மையத்தில் லேசான அறிகுறியுடன் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூடுதல் கண்காணிப்பு மையமாக பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாற்றும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பள்ளியில் மொத்தம் 150 படுக்கை வசதிகளுடன் அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன் அறிவுரையின் படி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.