ஓய்வு பெற்ற ஆசிரியரின் மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வீரராகவபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் அவருடைய மனைவியான சிவகாமி தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவசங்கரன் என்ற மகன் உள்ளார். இவர் கடத்தூர் பகுதியில் ஒரு பெட்டிக்கடை வைத்து அங்கேயே தங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசங்கரனுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் தனது தாயாரின் வீட்டிற்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தினமும் உணவு கொண்டு வரும் தாயார் சிவகாமி வராததால் சிவசங்கரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தனது தாயாரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு வாசலில் தலையில் பலத்த காயங்களுடன் சிவகாமி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிவசங்கரன் உடனடியாக மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிவகாமியை கொலை செய்த மர்ம நபர்களின் விவரம் குறித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின் சிவகாமியின் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிவகாமியை கொலை செய்ததற்கான உண்மை காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.