மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மூதாட்டி தஞ்சை மாவட்டம் கீழ கபிஸ்தலம் என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாரே தவிர மற்றபடி எந்த விபரமும் சொல்லத் தெரியாமல் இருந்தார். இது குறித்து தகவலை காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில் அவர் மறுபடியும் தஞ்சை மாவட்டம் கீழ கபிஸ்தலம் என்று மட்டுமே கூறியுள்ளார். அதனால் தா.பழூர் காவல்துறையினர் தஞ்சை காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு 65 வயதுடைய மூதாட்டியை காணவில்லை என்று யாராவது புகார் தெரிவித்து உள்ளனரா என்று விசாரித்துள்ளனர். அதற்கு தஞ்சை காவல்துறையினர் அவ்வாறு யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் நாங்கள் விசாரித்து பிறகு தெரிவிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
அதன்படி தஞ்சை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கீழக் கபிஸ்தலம் அம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட வேலம்மாள் என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணவில்லை என்று கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தா.பழூர் காவல்துறையினரிடம் தஞ்சை காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து தஞ்சை காவல் காவல்துறையினர் மூதாட்டியின் உறவினரான ராஜ்குமார் என்பவரிடம் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் ராஜ்குமார் மதனத்தூர் காவல் நிலையத்திற்கு சென்று இவர் என்னுடைய சித்தி என்று காவல் துறையினரிடம் கூறினார். அதன் பிறகு காவல்துறையினர் மூதாட்டி வேலம்மாளிடம் இவர் யார் என்று கேட்டு உறுதிப்படுத்தியபிறகு அந்த மூதாட்டியை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.