சட்டவிரோதமாக வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு வீரபாண்டியபட்டினம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி கோவில் தெருவில் வசிக்கும் விநாயகமூர்த்தி என்பவர் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து காவல்துறையினர் விநாயக மூர்த்தியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 60 லிட்டர் ஊறல், 35 லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இவ்வாறு கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்சுதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.