இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி பாளையம் கிராமத்தில் முருகராஜ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் அரசூர் கிராமத்தில் வசிக்கும் புவனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புவனா அடிக்கடி தனது மாமா சத்யாவுடன் செல்போனில் பேசியதால் கோபமடைந்த முருகராஜ் அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்ததும் புவனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கணவன் மனைவி இருவரையும் சமாதானப்படுத்த சென்றபோது, இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புவனாவின் உறவினர்கள் முருகராஜை தாக்க முயன்ற போது, அவரது தம்பியான துரைமுருகன் அதனை தடுக்க சென்றுள்ளார். அப்போது புவனாவின் உறவினர்கள் ராணுவ வீரரான துரைமுருகனை கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் காயமடைந்த துரைமுருகனை மீட்டு சென்னை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் புவனாவின் உறவினர்கள் 2 பேரை கைது செய்ததோடு, தலைமறைவான 10 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.