ஸ்பெயினில் கடந்த 2 வருடங்களாக அவசர உதவி குழு மற்றும் காவல்துறை உதவி மையங்களுக்கு தேவையின்றி அழைப்பு விடுத்து பணியாளர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெயினில் உள்ள ஒவிடா நகரில் வசிக்கும் ஒரு நபர் கடந்த 2019 ஆம் வருடத்திலிருந்து காவல்துறையினர் மற்றும் அவசர சேவை குழுவினருக்கு அடிக்கடி, தேவையின்றி அழைப்பு விடுத்து, பணியாளர்களிடம் மரியாதையின்றி அநாகரீகமாக பேசிவந்துள்ளார். இதனை விடாமல் தொடர்ந்து இரண்டு வருடங்களாக செய்து வந்திருக்கிறார்.
அந்த வகையில், காவல்துறை உதவி மையத்திற்கு சுமார் 3789 தடவையும், அவசர சேவை மையத்திற்கு 4,957 தடவையும், மொத்தமாக சுமார் 8,746 தடவை அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் தொடர்பு கொண்டு பேசும்போதெல்லாம் அங்கு பணியாற்றுபவர்கள், தேவையின்றி இவ்வாறு தொடர்பு கொள்ளாதீர்கள் என்று கூறியுள்ளனர்.
எனினும் அதனை பொருட்படுத்தாமல், தொடர்ந்து போன் செய்திருக்கிறார். இதனால் காவல்துறை உதவி மையம், அந்த நபர் மீது புகார் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு பிறகு, அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.