தமிழ்நாடு முட்டை கோழி பண்ணை விற்பனையாளர்கள் சங்கம் ஒரு கோடி நிவாரண நிதியும், நோயாளிகளுக்காக 10 லட்சம் முட்டைகளையும் நிதி உதவியாக வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து பல பிரபலங்களும் நிறுவனங்களும் தங்களால் இயன்றதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழ்நாடு முட்டை கோழி பண்ணை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடி நிதியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு உணவளிக்க 10 லட்சம் முட்டைகள் இலவசமாக வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.