வரட்டுப்பள்ளம் அணை அருகில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த கரடி சிறிது நேரம் அங்கேயே நடனமாடி விட்டு பின்பு வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் பகுதியில் அணை ஒன்று உள்ளது. இங்கு காலை மாலை நேரங்களில் அருகிலுள்ள மலைப்பகுதியில் இருந்து மான்கள், கரடி, யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அணை பகுதிக்கு வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிப்பதற்காக கரடி ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியே வந்துள்ளது.
பின்னர் அது தண்ணீரை குடித்துவிட்டு அங்கேயே சிறிது நேரம் நடமாடிய பின்னர் வனப்பகுதிக்குள் சென்று உள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது “வனப்பகுதிக்குள் செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். ஏனென்றால் கரடி மற்றும் செந்நாய் அதிக அளவில் உள்ளதால் அவைகள் பொதுமக்களை தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் யாரும் மாலை நேரங்களில் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம்” என தெரிவித்துள்ளனர்.