முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எம்எல்ஏக்கள் எம்பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளிப்பார்கள் என மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து பல பிரபலங்களும் நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அளிப்பர் என அறிவித்துள்ளார். மேலும் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு திமுகவினர் உதவிகளை வழங்க வேண்டும். களப் பணியாற்றி கண்ணீரைத் தடுப்போம், ஒன்றிணைவோம், பேரிடர் காலத்தில் வென்றிடுவோம் என அவர் கூறியிருந்தார்.