தமிழகம் புது முனைப்போடு வெற்றி நடைபோடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து பல பிரபலங்களும் நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் திமுக எம் பி கனிமொழி தூத்துக்குடியை சேர்ந்த வருண்ய தேவி தன் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு சேமித்து வைத்திருந்த ரூபாய் 2 ஆயிரத்தை என்னிடம் அளித்தது என்னை மிகவும் நெகிழ வைத்துள்ளது. இளம் வயதிலேயே ஈகை குணம் கொண்ட சிறுவர்கள் கொண்ட தமிழகம் இந்த பேரிடர் காலத்தை கடந்து புதிய முனைப்போடு வெற்றி நடை போடும் என்ற நம்பிக்கையினை எனக்கு அளித்தது என அவர் கூறியுள்ளார்.