சேலம் மாவட்டத்தில் மான் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 3 பேருக்கு வன அலுவலர் அபராதம் விதித்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி வனப்பகுதிக்கு அருகில் சிறுமலை கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த கருப்பன் என்பவரது தோட்டத்தில் நாய்கள் துரத்தி கடித்ததால் பெண் புள்ளிமான் ஒன்று இறந்து விட்டது. இந்நிலையில் அந்த புள்ளி மானை அறுத்து அதன் இறைச்சியை சமைப்பதாக வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது அப்பகுதியைச் சேர்ந்த கருப்பன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டு விட்டு மீதம் இருந்த 2 கிலோ இறைச்சியை மாதையன் மற்றும் செல்லத்துரை ஆகியோருக்கு கொடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து வனத்துறையினர் அவர்களிடமிருந்து இறைச்சியை பறிமுதல் செய்ததுடன் மாதையன், கருப்பன் மற்றும் செல்லத்துரை ஆகிய 3 பேரையும் கைது செய்து வன அலுவலர் முன்பு ஆஜர் படுத்தியுள்ளனர். வன அலுவலர் அவர்களுக்கு தலா 25 ஆயிரம் என மொத்தம் 75 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்துள்ளார்.