சென்னையில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்துவிட்டு சுற்றுலா செல்லும் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் வடபழனி, அசோக்நகர், பாண்டி பஜார், விருக்கப்பாக்கம், எம்ஜிஆர் நகர் ,சூளைமேடு ,தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் 2015 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க வடபழனி காவல் உதவி ஆணையர் ஆரோக்கிய பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்பின் கொள்ளையன் கார்த்திக் என்ற மாரியப்பன் தியாகராஜ நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர் . மேலும் அவனிடம் இருந்து 32 சவரன் தங்க நகைகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர் . அதைத்தொடர்ந்து கார்த்தியிடம் மேற்கொண்ட விசாரணையில் பூட்டிய வீடுகளில் திருடிய பணத்தை வைத்து சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளான் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது .
மேலும் , இவன் பத்தாம் வகுப்பு தேர்வை சிறையில் எழுதியுள்ளான். அதுமட்டுமின்றி இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளான் . இந்நிலையில் சிலவாரங்களுக்கு முன்பு சூளைமேட்டில் மூன்று வீடுகளில் கார்த்திக் கைவரிசையை காட்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.