பெங்களூரு மாநிலத்தில் தாய் மற்றும் சகோதரர் இறந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அவர்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாநிலம் ராஜராஜேஸ்வரி நகரில் ஒரு பிளாட்டில் லட்சுமி என்ற மனநிலை பாதித்த பெண்ணுடன் அவரது தாய் மற்றும் சகோதரர் இருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப்பெண்ணின் தாய்க்கு கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருந்தார். இதையடுத்து பல நாட்களாகியும் அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராத காரணத்தினால் அருகிலிருந்தவர்கள் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை தட்டியபோது அந்த மன நலம் பாதித்த பெண் கதவைத் திறந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்த போது பெண்ணின் தாயும் அவரது சகோதரரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது தாய் மற்றும் சகோதரர் இரண்டு நாட்களாக உறங்கிக் கொண்டு இருப்பதாக கூறினார். நான் எழுப்பியும் அவர்கள் எழுந்திருக்கவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து இரண்டு நாட்களில் உணவு ஏதாவது சாப்பிட்டீர்களா? என்று கேட்ட கேள்விக்கு அவர்கள் எனக்கு உணவு சமைத்து தராத காரணத்தினால் நான் உணவு உண்ணவில்லை என்று தெரிவித்தார்.
தாயும் சகோதரனும் இறந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் அவர்களுடன் இந்த மனநலம் பாதித்த பெண் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்தப் பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர்.