பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில்1,149 நீதிமன்றங்கள் உள்ளது.சென்னையில் 126 நீதிமன்றங்களும் பிற மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்களும் இயங்குகின்றன. இதற்கான கட்டடங்கள் பராமரித்தல், குடியிருப்பு கட்டடம் போன்ற நீதித்துறையின் மேம்பாட்டு பணிக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது.
மேலும் 2011- 12 முதல் 18- 19 வரை 456 புதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-19 ஆம் ஆண்டு அரசு அமைத்துள்ளது என்று தெரிவித்த தமிழக முதல்வர் பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் , உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்தார்.