வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி கிராமத்தில் தங்கசாமி-புவனேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவில் காற்றோட்டமாக இருக்க கதவைத் திறந்து வைத்து துவங்கியுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் 2 மணிக்கு வீடு புகுந்து புவனேஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றுள்ளார்.
பின்னர் அதே போன்று அடுத்த வீட்டிலும் அவர் நகை திருடும் முயற்சித்துள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டனர். அப்போதுதான் புவனேஸ்வரியும் அவரது குடும்பத்தினரும் விழித்துக்கொண்டு திருடனை பிடிக்க முயற்சித்துள்ளனர்.
அதன் பின்னரே புவனேஸ்வரி தன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் கீழவளவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.