ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் மேம்பாலத்திலிருந்து சத்தியமூர்த்தி நகர் பக்கிங்காம் கால்வாய் வரை 40 அடி அகலம் உள்ள சர்வீஸ் சாலை இருக்கின்றது. இந்த சாலையை ஒட்டி 6 அடி அகல இடம் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்து வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் கடைகளை கட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை துவங்க முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து திருவொற்றியூர் மண்டல செயற்பொறியாளர் பால் தங்கதுரை, உதவி பொறியாளர் அமல்ராஜ் மற்றும் காவல்துறையினர் போன்றோர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றியுள்ளனர். அப்போது அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.