மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நடத்தவேண்டும் என மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட ஆவின் தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் பெரியகருப்பன் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “மதுரை ஆவினில் 11 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து ஏற்கனவே ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 11 பேர் இயக்குனர்களாக போட்டியின்றி தேர்வானதை ரத்து செய்துள்ளது. மேலும் மூன்று மாதத்திற்குள் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி 11 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 24-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 25 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர்.
ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கினால் பல தரப்பினரும் வந்து செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே 11 இயக்குனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலை தற்போது ரத்து செய்ய வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி “ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு பின்னர் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு முறையாக தேர்தலை நடத்த வேண்டும்” என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்துள்ளார்.