சிறுமியை திருமணம் செய்து கற்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருக்கு வயது 23ஆகும். இவருக்கும் உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள 16 வயது சிறுமிக்கும் கடந்த ஜூன் மாதம் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பின்னர் செல்லப்பாண்டி காடுபட்டி கிராமத்தில் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக செல்ல பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இருவரின் பெற்றோர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதால் அவரை பாதுகாப்பாக மீட்டு மதுரை அரசு குழந்தைகள் காப்பகத்தில் அதிகாரிகள் சேர்த்துள்ளனர்.