சிறுத்தைப்புலி ஒன்று நாயை கவ்வி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வண்டிச்சோலை, அட்டடி, கரோலினா போன்ற பகுதிகளில் சிறுத்தை புலி நடமாட்டமானது அதிக அளவில் உள்ளதால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குன்னூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியின் முன் பக்க கதவில் சிதைந்த நிலையில் தொங்கிக்கொண்டிருந்த நாயின் உடலை கண்டு வனத்துறையினருக்கு காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, சிறுத்தைப்புலி ஒன்று கண்டோன்மென்ட் வனப்பகுதிக்கும், சிம்ஸ் பூங்கா வனப்பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் நாயை கவ்வி கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு சிறுத்தையானது விடுதியின் கதவை தாண்ட முயற்சிக்கும்போது நாயின் உடல் கதவில் சிக்கிக்கொண்டதால் சிறுத்தைப்புலி மட்டும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.