ஜோலார்பேட்டை ரயிலில் ரேஷன் பொருளை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது ரயிலில் ரேஷன் பொருள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
அதன்பின் அந்த ரயில் பெட்டியில் உட்கார்ந்திருந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த ரவியின் மனைவி சரஸ்வதி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு சரஸ்வதி ரேஷன் பொருள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் பறிமுதல் செய்த ரேஷன் பொருளை வேலூர் நுகர்வுப் பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் போலீசார் சட்டவிரோதமாக ரேஷன் பொருள் கடத்திய சரஸ்வதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.