நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் டெல்லியை சேர்ந்த சமூக ஆர்வலரான பவ்ரின் காந்தாரி என்ற பெண் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் நெருங்கிய தோழியின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் ஆக்சிஜன் உதவி கேட்டு வீட்டின் அருகே வசிக்கும் ஒருவரிடம் கோரிக்கை விடுத்தார். அந்த நபர் என்னுடன் படுக்கையை பகிர்ந்தால் ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
இதுபோன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? என்று குறிப்பிட்டிருந்தார். பெரும் துயரத்திற்கு மத்தியிலும் இதுபோன்ற ஈவு, இரக்கமற்ற கொடூரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இது போன்றவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.