பாதுகாப்பு வேண்டி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்ற தொழிலாளியை காட்டுயானை மிதித்து கொன்று விட்டது. இந்நிலையில் தேவாலா, நெல்லியாளம், பாண்டியாறு, சேரங்கோடு மற்றும் கொளப்பள்ளி போன்ற இடங்களில் வேலை பார்க்கும் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானையிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் பேச்சுவார்த்தையினால் சமாதானம் அடையாத தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததால் பச்சை தேயிலை பறிக்கும் பணியானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.