குடியாத்தத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த 9 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடைகள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அதன்படி கலெக்டர் ஷேக்மன்சூர் உத்தரவின்படி, குடியாத்தம் தாசில்தார் வத்சலா தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் பலர் சந்தப்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த மூன்று நகைக் கடைகளுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதுபோன்று கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த 9 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், சுகாதார அலுவலர் செந்திகுமார் போன்ற நகராட்சி அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் குடியாத்தம் பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் விதிமுறைகளை பின்பற்றாத ஓட்டலுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது