தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளிதழ் விற்கும் கடைகள், பால் பாக்கெட் கடைகள், மருந்துக் கடைகளைத் தவிர்த்து மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.