பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா மறைவுக்கு கட்சி உறுப்பினர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.எல்.பாட்டியா நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். 100 வயதான இவர் அமிர்தசரஸ் தொகுதியில் 6 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் 1992ஆம் ஆண்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார். இதனையடுத்து கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை கேரள மாநிலத்தில் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து 2008ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை பீகார் மாநிலத்தில் கவர்னராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்பு அமிர்தசரசில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் இவரது மறைவுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.