திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் கலெக்டர் கூடுதல் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் இலவச சித்த மருத்துவம் தொடக்க விழா மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவனருள் தலைமை தாங்கியதோடு, எம்.எல்.ஏக்கள்., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார், டி.எம். கதிர்ஆனந்த் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சி.என்.அண்ணாதுரை எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளரான கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் பேசியபோது, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன் அருள் அனைத்து அலுவலர்களையும், பணியாளர்களையும் அரவணைத்து செல்வது பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தை விடவும் கொரோனா பாதிப்பு திருப்பத்தூரில் குறைவாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார். அதன்பின் இந்த மாவட்டங்களில் விரைவில் மருத்துவக் கல்லூரி வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனால் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரண நிதி கொடுப்பதுடன், மளிகை பொருட்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில், அரசு தலைமை மருத்துவர், மாவட்ட கொரோனா கட்டுபாடு அதிகாரி, சுகாதாரத்துறை துணை இயக்குனர்,வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் காவல், உள்ளாட்சி, நகராட்சி, சுகாதாரம், சார்-ஆட்சியர், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.