இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.
அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகளும், புதிதாக கண்டறியப்பட்ட தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் உள்ளூர் அளவிலான ஊரடங்கு தான் இப்போதைக்கு தேவை. அதனால் அனைத்து மாநிலத்திலும் உள்ளூர் ஊரடங்கு அமல்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும் உபரியாக பயன்படாமல் சில மாநிலங்களில் இருக்கும் ஆக்சிஜனை தேவை இருக்கும் பகுதிகளுக்கு உபயோகிக்க வேண்டும் என்றார்.