காங்கோ குடியரசில் ரம்ஜான் பண்டிகையின் போது இஸ்லாமியரர்களுக்கிடையே நடந்த மோதல் வன்முறையாக மாறி சுமார் 29 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் இருக்கும் தியாகிகள் மைதானத்திற்கு வெளியில் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு இஸ்லாமிய குழுக்கள் ரம்ஜான் பெருநாளை நடத்துவது குறித்து விவாதித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியுள்ளது.
இதனால் காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி அவர்களை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த வன்முறையில் அதிகாரிகள் பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சுமார் 41 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் சுமார் 31 நபர்கள் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதில் 29 நபர்களுக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. ஆனால் காங்கோ குடியரசு, மரண தண்டனையை தடை செய்திருக்கிறது. எனவே ஆயுள் தண்டனை வாழ்நாள் முழுவதும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.