சேலம் மாவட்டத்தில் கொரோனா நிவாரண தொகை வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராமன் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அதில் முதல் கட்ட தவணையாக ரூபாய் 2000 இந்த மாதமே வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள 1,591 ரேஷன் கடைகள் மூலம் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் 10 லட்சத்தை 12 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா நிவாரண தொகை முதல் தவணையாக 2000 வழங்கப்படுகிறது.
இதனையடுத்து கன்னங்குறிச்சியிலுள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் ரூபாய் 2000 நிவாரண தொகை வழங்கும் பணி நடைபெற்றது. அதில் மாவட்ட கலெக்டர் ராமன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ, வக்கீல் ராஜேந்திரன் மற்றும் எஸ்.ஆர் பார்த்திபன் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண நிதியை வழங்கி தொடங்கி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மக்கள் முக கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து நீண்ட வரிசையில் காத்திருந்து ரூபாய் 2000 வாங்கிச் சென்றுள்ளனர். மேலும் ஊரடங்கு காலத்தில் ரூபாய் 2000 நிவாரணத் தொகை வழங்கியது பெரும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.