நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயம் என்று கூறப்பட்டு வந்தது. இதையடுத்து ஆதார் இல்லை என்றால் கொரோனா தொடர்பான சேவைகள் மறுக்கப்படுவதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் தடுப்பூசி போட ஆதார் தவிர அடையாளம் காணக்கூடிய வேறு ஆவணங்களை வழங்கலாம். ஒருவருக்கு ஆதார் இல்லையெனில் அவருக்கான அத்தியாவசிய சேவைகள் மறுக்கப்படக்கூடாது என்று அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.