பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி காட்டு யானை அட்டகாசம் செய்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மேல் கூடலூர், எடப்பள்ளி, சில்வர் கிளவுட், தோட்ட மூலா போன்ற பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசமானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்பகுதிகளில் முதுமலை வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அள்ளூர் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியதோடு, கழிவு நீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து வந்த காட்டு யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதன்பிறகு காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.