பழ வியாபாரி தனது தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூங்கா நகர் பகுதியில் காதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாகிர் உசேன் மற்றும் தவுபிக் என்ற 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் ஜாகிர் உசேன் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். ஆனால் தவுபித் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் தவுபிக் தனது சகோதரி மற்றும் தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்ததோடு, அவர்களை தாக்கியுள்ளார். இதனையடுத்து ஜாகிர் உசேன் வீட்டிற்கு வந்தபோது தனது தம்பியின் நடவடிக்கையை அறிந்து அவரை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த ஜாகிர் உசேன் வீட்டில் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தனது தம்பியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தவுபிக் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் தம்பியை குத்தி கொலை செய்த ஜாகிர் உசேன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.